ஸ்ரீ அழகு நாச்சியம்மன் துணை

பழனி, கலயம்புத்தூர் அக்ரஹாரத்தை பூர்வோத்திரமாகக் கொண்டு, உலகின் - இந்தியாவின் - தமிழ் நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் "ஆத்ரேய கோத்திராதிகள்" அனைவருக்கும், கலயம்புத்தூர் ஸ்ரீ அழகு நாச்சியம்மன் குலதெய்வம்.


சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன் (1996-97) நம் ஆத்ரேய கோத்திரத்தைச் சேர்ந்த சில குடும்பங்களுக்கு ஜோதிடம்/ஆரூடம் மூலம் நம் கோத்திரக்காரர்களுக்கு கலயம்புத்தூர் ஸ்ரீ அழகு நாச்சியம்மன் தான் குலதெய்வம் என்ற செய்தி கிடைத்தது. அதன்படி, 1997-ஆம் ஆண்டு சில குடும்பத்தினர் அழகு நாச்சியாருக்கு ஆண்டு வழிபாடு செய்தனர். இந்த செய்தி பரவி, மேலும் சில குடும்பத்தினரும் ஒன்று சேர்ந்து 1998 ஆகஸ்டு 15 கூட்டு வழபாட்டினை அழகு நாச்சியாருக்குச் செய்தனர்.

அப்போது, ஆண்டுதோறும் ஆகஸ்டு 15 அன்று அனைத்து ஆத்திரேய கோத்திராதிகளுடனும் தொடர்பு கொண்டு சிறப்பு வழிபாடு செய்ய முடிவெடுக்கப்பட்டது.

* * * * * * * * * *

17.7.1999 அன்று கோட்டாணிக்கரை ஸ்ரீ பகவதியின் பேரருளையும், திருக்கோயிலூர் ஸ்ரீ மஹாசித்தர் ஸ்ரீ ஞானானந்த சுவாமிகளின் பூரண சித்து அனுக்ரஹத்தயும் தனக்குள் பெற்ற தாம்பரம் ஸ்ரீ பகவதி சித்தர் பீடம் பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சுவாமி பகவதி சித்தர் அவர்கள் நம் கலயம்புத்தூருக்கு வருகை புரிந்தார். அவர், நமது அழகு நாச்சியம்மன் ஆலயத்துக்கும் தரிசனத்துக்கு வந்தார். பிறகு, அம்மாள் அருளாலும், ஸ்ரீ ஞானானந்தர் அருளாலும், ஸ்ரீ சுவாமி பகவதி சித்தரின் அருள் வாக்கு கீழ்க்கண்டபடி நமக்குக் கிடைத்தது:

"சுமார் 300-350 ஆண்டுகளுக்கு முன், இப்போதைய அழகுநாச்சி ஆலயம், ஸ்ரீ வள்ளியின் சிறு கோயிலாக வள்ளுவர் இன மக்களால் வழிபடப் பட்டது. காலப்போக்கில், அது மறைந்து விட்டது. அந்த சமயம், குக்கிராமமான கலயம்புத்தூர் அக்ரஹாரத்தில், ஒரு வயதான பிராமணர் - ஆத்ரேய கோத்திரத்தைச் சார்ந்தவர் - திருப்பதிப் பெருமாளை தரிசனம் செய்ய வண்டி வசதிகள் அற்ற அந்த காலகட்டத்தில் பாதயாத்திரையாக கீழ்த் திருப்பதி சென்றடைந்தார். மலையேறி பெருமாளைக்காண இயலாத உடல் நிலை. கண்ணீர் மல்க ஸ்ரீ பத்மாவதியின் சன்னிதானம் அடைந்து அம்பாளை வேண்டினார். மஹாலக்ஷ்மி ப்ரத்யக்ஷமாகி, அவர் கண்ணீரைத் துடைத்து, ஸ்ரீ ஸ்ரீநிவாசனை மலையிலிருந்து கீழே அழைத்து, ஸ்ரீ பத்மாவதி சமேத ஸ்ரீ வெங்கடநாத தரிசனத்தை நம் ஆத்ரேய கோத்திரப் பெரியவருக்கு அளித்தாள். பிறகு, பெருமாள் மறைந்துவிட, ஸ்ரீ பத்மாவதி முதியவரிடம், 'உன் வழித்துணையாக, உனது ஊர் எல்லை வரை நான் கொண்டுவந்து விடுகிறேன்' என்று கூறி நம் கலயம்புத்தூர் வரை முதியவருடன் வந்த பத்மாவதி, தற்போது அழகு நாச்சியார் கோயிலில் உள்ள இடத்தில் நின்று விட்டாள். முதியவர், விழுந்து வணங்கிப் பிரார்த்தித்து, அவள் - அன்னை - அம்பாள் அருளைத் தனது ஆத்ரேய கோத்திராதி வம்சத்துக்கு என்றும் அளிக்கவேண்டும் என்று கூற, ஸ்ரீ பத்மாவதியும் 'நான் அழகு நாச்சியாக இங்கு வீற்றிருப்பேன் - உன் ஆத்ரேய கோத்திர வம்சாவளியினருக்கு குலதெய்வமாகி என்றும் அருள் பாலிப்பேன்' என்று கூறி மறைந்தாள். இக்கோயிலில் வெளியே சூலங்கள் நடப்பட்டிருந்தாலும், அம்பாளுக்கு கையில் சூலம் கிடையாது. மேலும், இக்கோயிலில் ஹயக்ரீவர் இருப்பதும் ஸ்ரீ அழகு நாச்சியம்மை, பத்மாவதித் தாயார்தான் என்றும் ஊர்ஜிதமாகிறது."

"ஆகவே, இக்கோயிலின் அம்பாள், வள்ளுவ இனத்தாருக்கு வள்ளியாகவும், ஆத்ரேய கோத்திரம் மற்றும் பிராமண சமூகத்திற்கு பத்மாவதித் தாயாராகவும், சூலம் நட்டு வழிபடுவோருக்கு சின்ன மாரியம்மனாகவும் அருள் பாலிக்கிறாள்."

ஆத்ரேய கோத்திராதிகள் திருப்பதி வெங்கடாஜலபதியை குலதெய்வமாகக் கொண்டாலும், இத்தகைய செய்தி மூலம் கலயம்புத்தூரில் ஸ்ரீ பத்மாவதி - அழகு நாச்சியாராக அமர்ந்திருப்பதால், அம்பாளை வழிபட்டு பிறகு பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பானது."

ஆண்டுக்கு ஒரு முறை ஆத்ரேய கோத்திராதிகள் ஒன்று கூடி அழகு நாச்சியம்மனுக்கு வழிபாடு செய்வதால், ஆத்ரேய கோத்திராதிகள் அனைவருக்கும் பரிபூரண க்ஷேமமும், சௌபாக்யமும் கிடைக்கும்."

* * * * * * * * * *

மேலும் நம் கலயம்புத்தூருக்கு இப்பெயர் வந்த காரணமும் ஸ்ரீ சித்தர் அருள் வாக்கில் கிடைத்தது. ஸ்ரீ ஞானானந்தர் பல நூறு ஆண்டுகட்குமுன் பழனி மலைக் காட்டுப் பகுதியில் கைலாசநாத சித்தர் என்று இருந்ததாகவும், நம் இப்போதைய அக்ரஹாரத்தில் கைலாசநாத சித்தர் கலயத்தில் அமுதோடு வந்ததாயும், ஆகவே நம் ஊர் 'கலய அமுதூர்', அதாவது தற்போதைய 'கலயம்புத்தூர்' என மருவிவிட்டதாயும் செய்தி.

இத்தருணத்தில், ஸ்ரீ பத்மாவதித் தாயார் ஆத்ரேய கோத்திரத்தயும், ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் ஸ்ரீவத்ச கோத்திரத்தயும் சார்ந்தவர்கள் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

* * * * * * * * * *

ஆகவே, நம் ஆத்ரேய கோத்திர வம்சாவளியினரின் க்ஷேம, சௌபாக்யத்துக்கு, அனைவரும் இயன்ற அளவு ஒன்று கூடி, நம் குலதேய்வ அழகு நாச்சியாருக்கு ஆண்டு தோறும் ஆகஸ்டு 15 (ஆடி மாதம்) சிறப்பு அபிஷேக ஆரதனை செய்யத் திட்டமிட்டு நடைபெறுகிறது. இது விவரம் அனைவரும் தங்களுக்குத் தெரிந்த நம் கோத்திராதிகளுக்குத் தெரிவித்து, அனைவரும் அன்னையின் வழிபாட்டில் பங்கு பெற்று அன்னையை தரிசித்து அம்பாள் அருளைப்பெறப் பிரார்த்திக்கிறோம்.

அன்புடன்,
பழனி கலயம்புத்தூர் அக்ரஹார
ஆத்ரேய கோத்திராதிகள்.

ஒருங்கிணைப்பாளர்:

திரு. சந்தானகிருஷ்ணன் (கண்ணன்),
"ஸ்ரீ ஷண்முகன் அருள்" பிளாட் 24,
எண் 8, பூந்தோட்டம் இரண்டாவது தெரு,
நங்கனல்லூர், சென்னை 600 114.
தொலைபேசி எண்: +91 44 2232 4344